Known Temples, Unknown Facts ! – தெரிந்த கோவில்கள், தெரியாத தகவல்கள்
1. திருவண்ணாமலை கோவில் அண்ணாமலையார் எப்பொழுதும் கோவிலை விட்டு வெளிவரும்போது ராஜகோபுரம் வழியாக வராமல் அருகிலிருக்கும் வாசல் வழியாகத்தான் வருவார்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள கோபுரங்களின் எண்ணிக்கை மொத்தம் 14. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் கிடையாது. மேலும் இக்கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் கிடையாது.
3. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில் உப்பு சேர்க்கப்படுவதில்லை.
4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், வைஷ்ணவ கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்தவொரு சிவாலயத்திலும் இதுபோன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
5. சிதம்பரம் நடராஜர் கோவிலில், விழாக்களின்போது மூலவரே வீதிஉலா வருவார். மற்ற கோவில்களில் உட்சவர் வீதிஉலா வருவதே வழக்கம். மேலும் இக்கோவிலில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்க முடியும்.
6. சைவர்களால் கொண்டாடப்படும் திருவாதிரையும், வைணவர்களால் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே .
7. அனைத்து திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு இருக்கும். ஆனால் திருக்கோவிலூரில் மட்டும் பெருமாளின் வலது கையில் சங்கு இடம்பிடித்திருக்கும்.
8. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் கோவிலின் நடை திறக்கப்பட்டு, பிறகு நவம்பர் மாதத்தில் மூடப்படும். அவ்வாறு நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் அடுத்த வருடம் மே மாதத்தில் கோவில் நடை திறக்கப்படும் வரை எரிந்துகொண்டே இருக்கும்.
9. காசியில் பல்லிகள் இருக்கும் ஆனால் அவை ஒலி எழுப்புவது இல்லை. மேலும் இந்நகரை சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.
10. குளித்தலை, மணப்பாறை வழியில் ஐவர் மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை. இம்மலைக்கு ஐயர்மலை, ரத்தினகிரி மலை என வேறுபெயர்களும் உண்டு.
11. எந்தவொரு கோவிலிலும் நவக்கிரகப் பிரதிஷ்டையானது கோவிலின் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.
12. ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவிலில் ஒற்றை கல்லால் ஆனா நடராஜர் சிலை உள்ளது. அச்சிலையை தட்டினால் வெண்கல ஓசை கேட்கும்.
13. சமயபுரம் மாரியம்மன் கோவில் கர்பகிரகத்தில், அம்மன் மிகப்பெரிய வடிவில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். இதுபோன்ற பெரிய சிலை வேறு எந்த கோவிலிலும் இல்லை. இச்சிலை சில மூலிகைப் பொருட்களை கொண்டு செய்யப்பட்டது .
14. தேனீ மாவட்டம், கம்பம் அருகில் உள்ள சுருளிமலை திருநீர்குகையில் அள்ள அள்ள விபூதி வந்து கொண்டே இருக்குமாம். இதுபோன்று கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை மற்றும் கங்கை கரையில் உள்ள திருவருணை ஆகிய திருத்தலங்களில் திருநீறு தானாகவே விளையும் அதிசயம் நிகழ்கிறது.
15. ரத்தினகிரி முருகன் கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறி காண்போரை வியக்கவைக்கிறது.
16. சென்னிமலை முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.
17. தேனீ மாவட்டம், தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலுக்கு அருகில் உள்ள மாமரத்தின் அடியில் நீர் ஊற்று ஒன்று உள்ளது. இதில் எப்போதும் நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கும். இக்கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர்.
18. காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது.
Reach us to be a part of our whatsapp spiritual reminder group
I can not read or understand Tamil so u please translate it in English.