Lord Bhairavar Worship and its Benefits – பைரவரை வழிபடும் முறைகள் மற்றும் நன்மைகள்
நமது வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்படும் துன்பம், விபத்து, துர்மரணம், ஜாதக தோஷங்கள், மாந்திரீக பாதிப்புகள் போன்றவற்றில் இருந்து விடுபட காலத்தின் அதிபதியான பைரவருக்கு நமது துன்பங்கள் நம்மைவிட்டு நீங்கும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் விளக்கு ஏற்ற வேண்டும்.
வெண்பூசணியில் விளக்கு ஏற்ற முடியாதவர்கள் தினமும் ஒரு சாதாரண விளக்கை பைரவருக்கு ஏற்றலாம்.
தினமும் கோவில் செல்ல இயலாதவர்கள் ஒரே நாளில் 7விளக்குகளை ஏற்றலாம். அந்த நாள் சனிக்கிழமையாக இருந்தால் மிகவும் நல்லது.
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் விளக்கு ஏற்றலாம். அனைத்து பைரவர்களும் சமமான சக்தியை கொண்டவர்களே.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரை தனக்கு பதிலாக விளக்கு ஏற்ற சொல்லலாம்.
நிபந்தனைகள்
இந்த வழிப்பாட்டை தொடங்குவதற்கு முன்பாக விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்து, விளக்கு ஏற்றி வணங்கிவிட்டு பிறகு பைரவருக்கு விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு ஒவ்வொரு முறையும் விநாயகருக்கு விளக்கு ஏற்றிய பிறகுதான் பைரவருக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.
இவ்வழிபாட்டைத் தொடங்கும் நாள் வளர்பிறை நவமி, தேய்பிறை நவமி, பிரதமை திதி ஆக இருக்க கூடாது. மேலும் அந்நாளில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமாக இருக்க கூடாது. தேய்பிறை அஷ்டமிதான் இவ்வழிபாட்டைத் தொடங்குவதற்கான மிகச்சிறந்த நாள்.
கோவிலின் நடை சாத்தி இருந்தாலோ, பைரவரின் அறை திரையிட்டு மூடி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு ஏற்ற கூடாது.
இவ்வழிபாட்டின்போது அசைவ உணவுகள் உண்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பைரவருக்கு விளக்கு ஏற்றுவதால் விளையும் நன்மைகள்
பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி, அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர், எனவே பைரவரை வழிபடுவதன் மூலம் அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்கும்.
விளக்கு ஏற்ற தொடங்கியதிலிருந்து இரண்டாவது தேய்பிறை அஷ்டமிக்குள் நமது வாழ்வில் நிறைய நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.
நமது துன்பங்கள் எல்லாமே நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும், நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும்.
நமது முன்னேற்றத்துக்கு தடையாக வரும் சிக்கல்களை நாமே தீர்க்கும் வழியை பைரவர் நமக்கு காட்டுவர்.
நம்முடைய கர்ம வினை நமக்கு பலத்தடைகளை தந்து பைரவரை வழிபடவிடாமல் செய்யும். இந்த தடைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம்தான் விடா முயற்சியாக தொடர்ந்து வழிபாட்டை செய்து வர வேண்டும்.
தொடர்ந்து பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதால் பைரவரே குருவாக இருந்து நம்மை வழி நடத்த ஆரம்பிப்பார். நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை நம்மை விட்டு விலக்கி நமக்கு நன்மைகளை வாரி வழங்குவார்.
அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனி சன்னதி இருக்கும்.
Reach us to be a part of our whatsapp spiritual reminder group